Last Updated : 13 Mar, 2020 09:16 PM

 

Published : 13 Mar 2020 09:16 PM
Last Updated : 13 Mar 2020 09:16 PM

என்பிஆருக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம்: எனக்கும் என் மனைவிக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லை; எங்களைத் தடுப்பு முகாமுக்கு அனுப்புவார்களா?- அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி

டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் கேஜ்ரிவால் பேசிய காட்சி : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

எனக்கும் எனது மனைவிக்கும் அமைச்சரவை சகாக்களுக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லை. நாங்கள் எவ்வாறு குடியுரிமையை நிரூபிப்பது? எங்களைத் தடுப்பு முகாமுக்கு அனுப்புவார்களா? என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, அதைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரவும் டெல்லி சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் என்ஆர்சி, என்பிஆருக்கு எதிரான தீர்மானத்தை கேபினட் அமைச்சர் கோபால் ராய் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) கடந்த 2010-ம் ஆண்டு வடிவத்திலேயேதான் நடைமுறைப்படுத்த வேண்டும்.

என்பிஆரைத் தொடர்ந்து, என்ஆர்சியையும் மத்திய அரசு நிறைவேற்ற முயலும். மக்கள் இந்த இரு சட்டங்களைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இப்போது இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது. கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் உங்கள் ஈடுபாட்டைக் காட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். என்பிஆர், என்ஆர்சியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், "நாட்டில் என்பிஆர் செயல்படுத்தப்பட்டால் என்ஆர்சி செயல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. குடியுரிமையை நிரூபிக்கத் தவறினால் முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்துக்களும் சேர்ந்து தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள்.

நாட்டில் உள்ள 11 மாநிலங்களின் சட்டப்பேரவைகள் என்ஆர்சி, என்பிஆரை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அறிவித்துள்ளன. இதுவே மத்திய அரசுக்கு மிகப்பெரிய செய்தி. கோபால் ராய் தாக்கல் செய்த என்பிஆருக்கு எதிரான தீர்மானத்தை டெல்லி சட்டப்பேரவை நிறைவேற்றி மாநிலத்தில் அமல்படுத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

90 சதவீத மக்களிடம் குடியுரிமையை நிரூபிக்கப் பிறப்புச் சான்றிதழ் இல்லை. என்பிஆர், என்ஆர்சிபடி குடியுரிமையை நிரூபிக்கச் சொன்னால், எவ்வாறு நிரூபிப்பார்கள். அனைவரையும் தடுப்பு முகாமுக்கு அனுப்புவார்களா. இது அனைத்து மக்களையும் அச்சுறுத்தும் சட்டமாகும். தயவுசெய்து இதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

எனக்கும், என் மனைவிக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லை, என் பெற்றோருக்கு இல்லை. அப்படியென்றால் என் குடும்பத்தையே தடுப்பு முகாமுக்கு அனுப்புவார்களா. என் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கும், 61 எம்எல்ஏக்களுக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லை. அனைவரையும் தடுப்பு முகாமுக்கு அனுப்புவீர்களா. நான் கேட்கிறேன், மத்திய அமைச்சர்கள் எத்தனை பேருக்குப் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது என்று தெளிவுபடுத்த முடியுமா" என கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x