

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து கூடி அதில் எடுக்கப் பட்ட முடிவின்படியே பில்லி, சூனியத்தில் ஈடுபட்டதாகக் கூறி 5 பெண்களை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறிய தாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தான். ஆனால், பில்லி, சூனியத்தில் ஈடுபட்டு வரும் 5 பெண்களின் சதியே இதற்குக் காரணம் என அந்த கிராம மக்கள் கருதினர்.
இதையடுத்து கிராம பஞ்சாயத்தை கூட்டி ஆலோசனை நடத்திய அவர்கள், அந்த 5 பெண்களைக் கொல்ல முடிவு எடுத்துள்ளனர். அதன் பிறகுதான் அவர்களை அடித்துக் கொன்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் மீது, சூனியக்காரர்களுக்கு எதிரான மாநில அரசு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.