Last Updated : 14 Mar, 2014 12:00 AM

 

Published : 14 Mar 2014 12:00 AM
Last Updated : 14 Mar 2014 12:00 AM

காங்கிரஸின் இரண்டாவது பட்டியலில் 71 பேர் அறிவிப்பு: வி.நாராயணசாமி உள்பட 6 அமைச்சர்கள் போட்டி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் டெல்லியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி உள்பட 71 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மீண்டும் சிக்பலாபூரிலும் தட்சிண கன்னடா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன பூஜாரியும் போட்டியிடுகின்றனர். மற்றொரு முன்னாள் அமைச்சரான சுபோத்காந்த் சஹாய் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் மீண்டும் போட்டியிடுகிறார். ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் புகாரால் பதவியை இழந்த பவன்குமார் பன்சலுக்கு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சண்டீகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் வி.நாராயண சாமி -புதுச்சேரி, முல்லப்பள்ளி ராமச்சந்திரன் -வடகரா, கே.வி. தாமஸ்- எர்ணாகுளம், கே.சி. வேணு கோபால்- ஆலப்புழா தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் பி.சி.சாக்கோ சாலக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தப் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான மதுசூதன் மிஸ்திரி வெளியிட்டார்.

இதில், கேரளா- 15, கர்நாடகா- 10, ஒடிசா- 6, மகாராஷ்டிரா- 7, மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலபிரதேசம் தலா 3, ராஜஸ்தான், அசாம், சத்தீஸ்கர் மற்றும் மேகாலயா ஆகியவற்றில் தலா 2 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

புதுச்சேரி, சண்டீகர், லட்சத்தீவு, நாகாலாந்து, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வேட்பாளரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள், 11 பெண்கள் உட்பட 71 பேர் இடம் பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் ரீட்டா பகுகுணாஜோஷி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இவர் சுதந்திரப் போராட்ட வீரரும் மாநில முன்னாள் முதல்வருமான ஹெச்.என்.பகுகுணாவின் மகள் ஆவார். மாநில காங்கிரஸ் தலைவராக 2007 முதல் 2012 வரை இருந்த ரீட்டா 2012-ல் மாநில சட்டமன்றத்துக்கு லக்னோவின் ராணுவப் பகுதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009 தேர்தலில் பாஜகவின் லால்ஜி டான்டனை எதிர்த்து இரண்டாவது இடத்தில் வந்தவர். லக்னோவில் தொடர்ந்து 5 முறை எம்பியாக இருந்த வாஜ்பாய் ஓய்வு பெற்றதால் கடந்தமுறை லால்ஜி டான்டனுக்கு ஒதுக்கப்பட்டு வெற்றி பெற்றார். தற்போது ராஜ்

நாத்திற்கு லக்னோவை ஒதுக்கு வதற்கு டான்டன் தடையாக இருந்து வருகிறார். காஜியாபாத்தில் பாலிவுட் நடிகரும் பதேபூர் தொகுதி எம்பியுமான ராஜ்பப்பர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான நக்மா முதன்முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார் இவருக்கு மீரட் தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. இவர், உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடுவார் என ‘தி இந்து’வில் கடந்த 9 ஆம் தேதியில் அவரது பேட்டியுடன் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பதிலாக உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாதில் பேகம் நூர்பானுவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி நேற்று தி இந்துவில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டி ராவின் ஹிங்கோலி தொகுதியில் வேட்பாளராக தலைவர் ராஜீவ் சாத்தவ் உட்பட இளைஞர் காங்கிரசை சேர்ந்த 9 பேரின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.விரைவில் தமிழக வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் கூட்டணி ஏற்படுவதற் கான வாய்ப்புகள் இருப்பதாக இப்போதும் கருதப்படுவதால் தமிழக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட வில்லை. இன்னும் சில நாள்களில் தமிழக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x