

மத்திய பிரதேசத்தில் பதவி விலகல் கடிதம் அனுப்பிய 22 எம்எல்ஏ-க்களும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் என்.பி.பிரஜாபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 10-ம் தேதி அக்கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்களாக கருதப்படும் 6 மத்திய பிரதேச அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் என்.பி.பிரஜாபதிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த கடிதங்களை பாஜகவினர் பேரவைத் தலைவரிடம் நேரில் ஒப்படைத்தனர். பதவி விலகியவர்களில் 19 பேர் பாஜகவினரின் கட்டுப்பாட்டில் பெங்களூருவில் தங்கி உள்ளனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் பிரஜாபதி செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறும்போது, “பதவி விலகல் கடிதம் அனுப்பிய எம்எல்ஏ-க்கள் சட்டப்படி முதலில் பேரவைத் தலைவர் முன்பு ஆஜராக வேண்டும். அதன் பிறகுதான் அவர்களுடைய கடிதங்களை பரிசீலித்து, உண்மைத் தன்மையை ஆராய்ந்து அவற்றின் மீது முடிவு எடுக்க முடியும்” என்றார்.
இதனிடையே, சட்டப்பேரவை முதன்மை செயலாளர் ஏ.பி.சிங் நேற்று கூறும்போது, “பதவி விலகல்கடிதம் வழங்கிய 22 எம்எல்ஏ-க்களும் நாளை (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று பேரவைத்தலைவர் பிரஜாபதி உத்தரவிட்டுள்ளார். அப்போது, தாமாக முன்வந்து பதவி விலகினார்களா அல்லது சிலரின் அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தார்களா என்பது குறித்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.
மாநில சட்டப்பேரவை பாஜகவின் தலைமை கொறடா நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் நேற்றுகூறும்போது, “காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 22 பேர் பதவி விலகி உள்ளதால், கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே, வரும் 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் மற்றும் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்” என்றார்.
திக்விஜய் சிங் கோரிக்கை
காங்கிரஸ் மூத்ததலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, “முதல்வர் கமல்நாத் ஏற்கெனவே கூறியது போல,சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளோம். ஆனால், எம்எல்ஏ-க்களின் பதவி விலகல் கடிதங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அதன் மீது பேரவைத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். அதன் பிறகுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றார்.- பிடிஐ