

புதுடெல்லி: கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதா என்பதை கண்டுபிடிக்க உடல் வெப்பத்தை அறிய உதவும் தெர்மல் இமேஜிங் கேமராவை நாடாளுமன்றத்தில் பொருத்த வேண்டும் என்று பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. பினாகி மிஸ்ரா நேற்று ஆலோசனை வழங்கினார்.
மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. பினாகி மிஸ்ரா, கோவிட்-19 வைரஸ் குறித்த கவலையைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஈரான் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நமது நாடாளுமன்றத்தின் நுழைவாயிலிலும் தெர்மல் இமேஜிங் கேமரா கொண்டு உறுப்பினர்களுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். - பிடிஐ