அதிருப்தி எம்எல்ஏக்களை பார்க்கச் சென்ற ம.பி. அமைச்சர்கள் தடுத்து நிறுத்தம்: பெங்களூரு போலீஸார் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதிருப்தி எம்எல்ஏக்களை பார்க்கச் சென்ற ம.பி. அமைச்சர்கள் தடுத்து நிறுத்தம்: பெங்களூரு போலீஸார் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியுள்ள ம.பி. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏகளை சந்திக்கச் சென்ற அம்மாநில அமைச்சர்கள் இருவரை போலீஸார் கடுமையாக தாக்கி விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் கமல்நாத்துக்கும், மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அவர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தார்கள். அவர்களில் 19 பேர் பெங்களூருவில் பாஜக ஆதரவாளர்களின் பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், 228 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 206 ஆகக் குறைந்தது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர்.

பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 95 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சி தன்னிடம் இருக்கும் 95 எம்எல்ஏக்களையும் பாஜகவின் குதிரை பேரத்துக்குப் பயந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்தநிலையில் பெங்களூருவில் தங்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரை சந்திப்பதற்காக ம.பி. அமைச்சர்கள் ஜிது பத்வாரி, லக்கன் சிங் ஆகிய இருவர் இன்று பெ்ஙகளூரு வந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் பண்ணை வீட்டிற்கு அருகே சென்றனர். ஆனால் அவர்களை கர்நாடக போலீஸார் தடுத்து நிறுத்தி தனி இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திக் விஜய் சிங் உட்பட ம.பி. காங்கிரஸ் தலைவர்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் ‘‘எங்கள் அமைச்சர்கள் து பத்வாரி, லக்கன் சிங் ஆகிய இருவரும் பெங்களூருவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கை எடுக்க எந்த உரிமையும் போலீஸுக்கு இல்லை அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கர்நாடக போலீஸாரை நீதிமன்றத்தில் சந்திப்போம்’’ எனக் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in