

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 119 நாடுகளிலும் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவில் நேற்று நிலவரப்படி இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் சந்தேகிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாநில, மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
மேலும் இந்தியா முழுவதும் தற்போது 52 கோவிட்-19 வைரஸ் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர கூடுதலாக 57 இடங்களில் ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.
அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி டெல்லியில் 6 பேரும், கேரளாவில் 17 பேருக்கும், ராஜஸ்தான் மற்றும் தொலங்கானாவில் தலா ஒருவருக்கும், உ.பி.யில் 10 பேருக்கும், தமிழகம், காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கும், கர்நாடகாவில் 4 பேருக்கும், மகாராஷ்டிராவில் 11 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தவிர இந்தியா வந்துள்ள வெளிநாட்டினர் 17 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 73 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்களில் 10 லட்சத்து 57 ஆயிரத்து 506 பேருக்கு கரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.