

மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நேற்று திரும்பப் பெறப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடக்க நாள் முதலாக அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பாஜக எம்.பி. ரமா தேவி அவைக்கு தலைமை வகித்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமையின் மையப் பகுதிக்கு வந்த முழுக்கமிட்டனர். அப்போது மசோதா நகல் ஒன்றை கிழித்து ரமா தேவியை நோக்கி எறிந்தனர். இதையடுத்து அவை நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கவுரவ் கோகோய், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், மாணிக்கம் தாகூர், ராஜ்மோகன் உன்னிதன், பென்னி பெஹனான், குர்ஜித் சிங் ஆஜ்லா ஆகிய 7 பேர் எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது பழிவாங்கும் நடவடிக்கை என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆராய துணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஹோலி விடுமுறைக்கு பிறகு நேற்று மக்களவை கூடியதும் 7 பேரின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இவர்களுடன் திமுக, இடதுசாரி உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். இதனால் அவைக்கு தலைமை வகித்த கீர்த்தி சோலங்கி அவையை பகல் 12.30 வரை ஒத்திவைத்தார்.
இதனிடையே சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பான துணைக்குழு உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினர். மேலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஓம் பிர்லாவை சந்தித்து அவர் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவைக்கு வரும்படியும் கேட்டுக்கொண்டனர். 7 உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து 7 உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை, அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொண்டு வந்தார். இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதை தொடர்ந்து, 7 உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக சபாநாயர் ஓம் பிர்லா அறிவித்தார்.