

கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்தவர் முகமது ஹுசேன் சித்தகி (76). இவர் கடந்த மாதம் 29-ம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து ஹைதராபாத் வழியாக கல்புர்கி திரும்பினார்.
அடுத்த சிலதினங்களில் முகமது ஹுசேன் சித்தகிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டதால் மருத்துவர்கள் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவரையும், குடும்பத்தாரையும் தனிமைப்படுத்தி ஒரு வாரமாக சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகமது ஹுசேன் சித்தகி நேற்று உயிரிழந்தார். கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற இவர் இறந்ததால், இந்தியாவில் அந்த நோய்க்கான முதல் பலி என செய்திகள் வெளியாயின. இதனால் கர்நாடகா, தெலங்கானா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்புர்கி சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் எம்.ஏ.ஜப்பார் கூறும்போது, ''76 வயதான முதியவரின் மரணத்துக்கான காரணம் தற்போதைக்கு தெளிவாக கூற முடியாது. அவர்கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தாரா? என்பதையும் உறுதிப்படுத்த முடியாது. அந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததால் அவரது ரத்த மாதிரிகளை பெங்களூரு மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்துக்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து சோதனைமுடிவுகள் வந்த பிறகே, மரணத்துக்கான காரணம் தெரியவரும்'' என்றார்.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இவரது மரணத்துக்கான காரணம் மற்றும் கர்நாடகாவில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லூரில் ஒருவர் பாதிப்பு
ஆந்திராவிலும் முதன்முறையாக நெல்லூரை சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் வேலை நிமித்தமாக இத்தாலி சென்று திரும்பினார்.
இவரை பரிசோதனை செய்ததில் இவருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதில் பாஸிடிவ் ரிசல்ட் வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து அந்த நபருக்கு தனி வார்டு அமைத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரா.வினோத்