

டெல்லியில் நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது, ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போன்று, டெல்லி கலவரம் நடந்த போது, அதிபர் ட்ரம்ப்புடன் விருந்தில் பங்கேற்றார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பாஜக தரப்பில் பதிலடி தரப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வகுப்புக் கலவரமாக மாறியது.
இந்தக் கலவரத்தில் ஏராளமான வீடுகள், கடைகள், பேருந்துகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்து எரிக்கப்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்தக் கலவரத்தில் இதில் 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும், உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் மக்களவையில் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டு இன்று கூடியது. ஏற்கனவே பல்வேறு கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என்று நோட்டீஸ் அளித்திருந்ததால், மக்களவை விதி 193-ன் கீழ் இந்த விவாதம் நடத்தப்பட்டது. ஆதலால், விவாதத்துக்குப் பின், வாக்கெடுப்பு ஏதும் நடத்தப்படவில்லை.
டெல்லி கலவரம் தொடர்பான விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பேசுகையில், " டெல்லியில் தொடர்ந்து 3 நாட்கள் கலவரம் நடந்தபோது, போலீஸார் அதைக் கட்டுப்படுத்தவில்லை. உலகின் தலைசிறந்தவர்கள் டெல்லி போலீஸார் என கூறப்பட்டும் கலவரம் தொடர்ந்து 3 நாட்கள் நடந்தது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். ரோம் நகரம் தீபற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போன்று டெல்லி கலவரம் நடந்தபோது அதிபர் ட்ரம்புடன் அகமதாபாத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த கலவரத்தில் ஒரு சமூகத்தினர் வென்றார்கள் என்றும் மற்றொரு சமூகத்தினர் வென்றார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் மனிதநேயம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
அஜித் தோவல் வந்து, கலவரம் பாதித்த பகுதிகளைப் பார்த்துவிட்டு கலவரம் கட்டுக்குள் வந்துவிட்டது என்று தெரிவித்தர். ஆனால் ஏன் உள்துறை அமைச்சர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்லவில்லை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மோடிக்கு அறிக்கை அளித்தார் என்றால் உள்துறை அமைச்சகம் மீது நம்பிக்கை இல்லையா
அதுமட்டுமல்லாமல் பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் டெல்லி போலீஸை கேள்வி கேட்டதற்காகவும் டெல்லி நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டார். எதற்காக நள்ளிரவில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. கலவரத்தை அடக்குவதில் தோல்வியுற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் " என வலியுறுத்தினார்
இதே கருத்தை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், மார்க்சிஸ்ட் எம்.பி. ஏ.எம். ஆரிப், ஆர்எஸ்பி எம்.பி. பிரேமசந்திரன் ஆகியோரும் வலியுறுத்தினர்.
பாஜக எம்.பி. மீனாட்சி லெகி பேசுகையில், " டெல்லி வன்முறையில் சிலர் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உடலில் 400 காயங்கள் இருந்தன. இது என்ன விதமான வெறுப்பு, இதுகுறித்தும் விவாதிக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கவுன்சிலர் வீட்டில் கற்களும், கட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன, அவர் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் பேசியதற்கான சான்றும் உள்ளன. ஆனால், மத்திய அரசும் டெல்லி போலீஸாரும் துரிதமாகச் செயல்பட்டு கலவரத்தை 36 மணி நேரத்தில் அடக்கினர்.
ஆனால், அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோர் பேசிய பேச்சுக்கும், கலவரத்துக்கும் தொடர்பில்லை. அதேபோல கபில் மிஸ்ரா மீதும் பழிபோடக்கூடாது" என்றார்
அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், "அநியாயக் காரர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்" என்று குரல் கொடுத்தார்
அதற்கு மீனாட்சி லெகி பதில் அளிக்கையில், " ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியது என்ன. அவர் பேசியதைப் போலவே ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பேசினார்கள்தானே. கடந்த 3 மாதங்கள் சாலையில் சிலர் அமர்ந்திருக்கிறார்களே.
இந்த அரசின் திட்டம் என்பது மக்களுக்கு வீடுகள், மின்சாரம், சமையல் சிலிண்டர் என வளர்ச்சி அரசியல் நடத்த விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சி வதந்திகளைப் பரப்புகிறது" எனத் தெரிவித்தார்
திமுக எம்.பி. டிஆர் பாலு பேசுகையில், " டெல்லி கலவரம் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் இங்கிலாந்து, ஈரான், இந்தோனேசியா, துருக்கி, மலேசியா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நாடுகள் நம்மைக் கேலி செய்கின்றன. சிஏஏ குறித்து அனைத்து நாடுகளும் கவலை தெரிவிக்கின்றன" எனத் தெரிவித்தார்
சிபிஐ எம்.பி. கே. சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஏ.எம். ஆரிப் ஆகியோர் டெல்லி கலவரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினர்.
எம்.பி. ஆரிப் பேசுகையில், " நாட்டின் மதச்சார்பின்மையைக் கொலை செய்துவிட்டது மத்திய அரசு. டெல்லி கலவரத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட மலையாளச் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை அனைத்தும் கண்டனத்துக்குரியவை. மத்திய உள்துறை அமைச்சர் ராஜினா செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்