

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமை ஆட்சிக்கு பெரிய நெருக்கடிகளைத் தோற்றுவித்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்ததையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இவருடன் 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ததால் மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகய்யின் மகனும் அசாம் லோக்சபா எம்.பி.யுமான கவ்ரவ் கோகய் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு சிந்தியாவின் முடிவு குறித்துக் கூறியதாவது:
நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரிய நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், உதாரணமாக டெல்லி வன்முறையைப் பாருங்கள்.. இந்நிலையில் ஒருவர் மதிப்புகளுக்கும் குறிக்கோள்களிலும் சோடை போகக் கூடாது. பாஜகவில் இணைவதன் மூலம் மதிப்பீடுகளைத் தியாகம் செய்வது கூடாது.
பாஜகவில் தனக்கு அதிக மரியாதை கிடைக்கும் என்று சிந்தியா நினைத்தால் அவர் பெரிய தவறிழைத்து விட்டார் என்றே பொருள், காங்கிரஸில் அவருக்கு அளித்த மரியாதையில் 10% கூட பாஜக அவருக்கு அளிக்காது என்பதே உண்மை.
என்றார் கவ்ரவ் கோகய்.
செவ்வாயன்று 120 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்த கமல்நாத் தலைமை காங்கிரஸ் அரசு புதனன்று 99 எம்.எல்.ஏ.க்களாகக் குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 104 தேவை, பாஜகவிடம் ஏற்கெனவே 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.