Last Updated : 11 Mar, 2020 04:00 PM

 

Published : 11 Mar 2020 04:00 PM
Last Updated : 11 Mar 2020 04:00 PM

சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள், வெறுப்புணர்வுப் பேச்சு: அகற்றுதல் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சமூகவலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் ஆகியவற்றில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் உள்ளடக்கங்களை அகற்றுவது குறித்து மத்திய அரசு, ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் பதிலை அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி சி.ஹரிஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை அமைச்சகம், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் 3 ஆன்லைன் ஊடகங்கள் ஆகியவற்றுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலாளர் கோவிந்தாச்சார்யா மேற்கொண்ட மனுவான இதன் மீதான விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

இந்த மனுவில் சமூக ஊடகங்களில் வெளியான போலி செய்திகள், சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வெறுப்புப் பேச்சு உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கியாக வேண்டும் என்று கோவிந்தாச்சார்யா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

சமூக ஊடகங்கள் வெறுப்புப் பேச்சுகளுக்கான புகலிடமாகிவிட்டன. இது குறித்து பேச அலுவலர்கள் இல்லாததால் நீதியை அமல்படுத்த சரியான வழிமுறைகள் இல்லை. சமூக ஊடகங்கள் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கோரினாலும் கலவரத்துக்கான உபகரணமாக சமூக ஊடகங்கள் ஆக முடியாது.

சமூக ஊடகங்கள் பேச்சுச் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன. இந்தியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். இது போன்ற ஆட்சேபணைக்குரிய மோசமான உள்ளடக்கங்கள்தான் சமூக ஊடகங்களின் வருவாயில் பெரிய அளவில் ஆட்சி செலுத்துகிறது.

இதற்கு எதிராக போலீஸார் பல நடவடிக்கைகள் மேற்கொண்டும் சமூகவலைத்தளங்களின் வெறுப்பைப் பரப்பும் செயல்பாடுகள் நீதிமன்றங்களுக்கு பெரும் சுமையாகி வருகின்றன. இப்போதே இதனை முடிக்கவில்லையெனில் இது பெரிதாக வளர்ந்து விடும். இதனால் கலவரங்களும் சமூகப் பிளவுமே ஏற்படும்.

இதனால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு மாணவர்கள் திண்டாடுகிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறு, தனியார் மற்றும் பொதுச்சொத்துக்களுக்குச் சேதம், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பின்மை ஆகியவற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும், என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீண்டும் ஏப்ரல் 14ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x