

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், அந்த விலை வீழ்ச்சியின் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் 2004-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததுபோல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை 35 சதவீதம் விலை குறைந்து பேரல் ஒன்று 38 டாலராகச் சரிந்தது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததுபோன்று குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 38.9 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இருந்த விலைக்கு ஈடாக கச்சா எண்ணெய் குறைந்துள்ளது.
ஆதலால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையைக் கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பாக இருந்தது போன்று குறைக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைவின் பயனை முழுமையாக நுகர்வோர்களுக்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வழங்க வேண்டும். பெட்ரோலில் ரூ.2.69 பைசாவும், டீசலில் ரூ.2.33 பைசாவும் விலை குறைத்தது முக்கியத்துவம் இல்லாதது.
அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் பிரதமர் மோடி அரசு பெட்ரோலியப் பொருட்கள் மீது சுங்க வரியையும், கலால் வரியையும் உயர்த்தி வருகிறது. ஆதலால் உடனடியாக பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை 35 முதல் 38 டாலராகக் குறைந்துள்ளது. அந்த விலைக்கு ஏற்றார்போல், கடந்த 2004-ம் ஆண்டு நவம்பரில் விற்பனையானது போல், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.37.84 பைசா, டீசல் விலை லிட்டர் ரூ.26.28, சிலிண்டர் ரூ.281.60 எனக் குறைக்க வேண்டும்.
அதிகமான பெட்ரோல், டீசல் விலையால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள், விவசாயிகள், போக்குவரத்து உரிமையாளர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக விலையைக் குறைக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோலிய நிறுவனங்கள் ஆண்டுக்கு லட்சம் கோடிகளில் லாபம் ஈட்டியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலில் கலால், சுங்க வரியை உயர்த்தியதன் மூலம் ரூ.16 லட்சம் கோடியை பாஜக அரசு கொள்ளையடித்துள்ளது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் 12-க்கும் மேற்பட்ட முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டிலிருந்து கலால் வரி பெட்ரோல் மீது 218 சதவீதமும், டீசல் மீது 458 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மே மாதம் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.9.2 பைசாவும், டீசலில் ரூ.3.46 பைசா வரியும் இருந்தது. ஆனால், இப்போது பெட்ரோலில் ரூ.19.98 பைசாவும், டீசலில் ரூ.15.38 பைசாவும் அதிகரித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் மோசமான விலை உயர்த்தும் கொள்கையால் டீசல், பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்தது. இதன் காரணமாகவே போக்குவரத்துச் செலவு அதிகரித்து, பணவீக்கமும் அதிகரித்தது''.
இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.