

காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிருப்தி காரணமாக நேற்று பதவி விலகிய மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் முறைப்படி தேசியத் தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில் இன்று இணைந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்துக்கும் இடையே தீவிரமான உரசல் இருந்து வந்தது. முதல்வர் பதவியைக் கைப்பற்றுவதிலிருந்த போட்டியில் கமல்நாத் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார்.
இதனால், கடந்த 15 மாதங்களாக கடும் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, பல்வேறு கட்டங்களில் கமல்நாத்துக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி தூக்கினார். மேலும், காங்கிரஸ் தலைமையும் உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்காததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் முடிவை ஜோதிராதித்ய சிந்தியா எடுத்தார்.
இதற்காக நேற்று டெல்லி சென்ற ஜோதிராதித்ய சிந்தியா உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அதன் இரு தலைவர்களும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்புக்குப் பின், ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து, ராஜினாமா கடிதத்தையும் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று பாஜகவில் முறைப்படி ஜோதிராதித்ய சிந்தியா இணைந்தார்.
மத்தியப் பிரதேசத்தில் விரைவில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்கும் நிலையில் அதில் ஒரு இடத்தை சிந்தியாவுக்கு பாஜக வழங்கும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியில் 4 முறை எம்.பி.யாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியப் பிரதேசம் குணா தொகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு முதன்முதலில் எம்.பி.யானார். தனது தந்தையின் மறைவுக்குப் பின் நடந்த இடைத்தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வென்ற சிந்தியாவுக்கு அப்போது வயது 31தான்.
இளம் வயதில் எம்.பி. ஆன சிந்தியாவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அதன்பின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, ஜோதிராதித்ய சிந்தியாவை கட்சியின் கொறாடாவாக தலைவர் சோனியா காந்தி நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது