

மாதவராவ் சிந்தியா துரோகி என மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஸ்ரீனிவாஸ் விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார்.
பின்னர் ஜோதிராதித்ய சந்தியா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்போது உடன் இருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது. இதனால் ம.பி. காங்கிரஸ் அரசு ஆட்டம் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார். ஜோதிராதித்ய சி்நதியாவின் ராஜினாமா கடிதத்தை அவரது உதவியாளர்கள் சோனியா காந்தியிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இதையடுத்து மாதவராவ் சிந்தியாவின் செயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில் ‘‘மாதவராவ் சிந்தியாவின் குடும்ப பின்னணியே துரோக பின்னணி தான்.
1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் நடந்தபோது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக சிந்தியாவின் மன்னர் குடும்பம் செயல்பட்டது. அதுபோலவே 1967-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜயராஜே சிந்தியா காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜனசங்கத்தில் சேர்ந்தார். இதனை தான் ஜோதிராதித்ய சிந்தியாவும் செய்துள்ளார்’’ எனக் கூறினார்.
இதற்கு மத்திய பிரதே முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரையில் ஜோதிராதித்ய சிந்தியாவை மன்னர் என வர்ணித்தார்கள். இப்போது அவர் மாபியா ஆகி விட்டாரா’’ என கேள்வி எழுப்பினார்.