கரோனா வைரஸ் பாதிப்பு ஈரானிலிருந்து 58 இந்தியர்கள் ஐ.ஏ.எஃப். விமானத்தில் தாயகம் திரும்பினர்

தாயகம் திரும்பிய இந்தியர்கள். | படம் : எஸ்.ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கம்.
தாயகம் திரும்பிய இந்தியர்கள். | படம் : எஸ்.ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கம்.
Updated on
1 min read

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 58 இந்தியர்கள் ஐஏஎஃப் விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 237 பேர் பலியாகி உள்ளனர். 7 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் இருப்பார்கள் என கருதப்படுகிறது. ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்தியர்களை மீட்டுவர உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி–17 குளோப்மாஸ்டர் என்ற விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு ஈரான் புறப்பட்டது. விமானத்தில் மருத்துவ குழுவினரும் சென்றுள்ளனர். அந்த விமானம், முதற்கட்டமாக 58 இந்தியர்களுடன் இன்று காலை இந்தியா திரும்பியது.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், “ சவாலான நேரத்தில் பணியாற்றிய ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய விமானப்படைக்கும் நன்றி. ஈரான் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. ஈரானில் இன்னும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பணியாற்றி வருகிறோம்” எனத்தெரிவித்துள்ளார்.

ஈரானில் சுமார் 2,000 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈரானில் கரோனா வைரஸ் ஆபத்து அதிகரித்து வருவதால் இவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி 76 இந்தியர்களை வூஹான் நகரிலிருந்து ஐஏஎஃப் விமானம் தாயகத்துக்கு அழைத்து வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in