

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் கோவிட் - 19 வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கோவிட் - 19 வைரஸை மது அழித்துவிடும் என்றும் மது குடித்தால் கோவிட் - 19 வைரஸ் பாதிப்பில் இருந்துகாத்துக் கொள்ளலாம் என்றும்இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. பீதியடைந்துள்ள மக்களும் இதுபோன்ற தகவல்களை உண்மை என்று நம்பத் தொடங்குகின்றனர். ஆனால், இது தவறான தகவல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மது குடிப்பதால் கோவிட் - 19 வைரஸ் பாதிப்பை தடுக்க முடியாது. மது குடித்தால் வைரஸ் தாக்காது என்றும் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற தகவல்களும் உண்மை அல்ல. மது குடிப்பதால் மட்டுமல்ல, மதுவையோ அல்லது குளோரினையோ உடல் முழுவதும் பூசிக் கொண்டாலும் அதன் மூலம் கோவிட் - 19 வைரஸை அழிக்க முடியாது.
அதுபோன்று செய்வது உடலுக்கும் கண்கள், வாய், மற்றும் துணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வெந்நீரில் குளித்தால் வைரஸ் பாதிப்பு இருக்காது என்பதும் தவறு. கைகளை அடிக்கடி தண்ணீர், சோப்பால் கழுவி சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கோவிட் - 19 வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.