

சீனாவில் தோன்றி இன்று உலகம் முழுதும் அச்சுறுத்தலையும் பீதியையும் கிளப்பி வரும் கோவிட்-19 என்ற கரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள், சுகாதார நிபுணர்கள், உலகச் சுகாதார அமைப்பு ஆகியவை பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வாரணாசியில் தெய்வ விக்கிரகங்களுக்கே முகமூடி அணிவித்துள்ளார் கோயில் குருக்கள் ஒருவர்.
இது தொடர்பாக வாரணாசி கோயில் குருக்கள் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறியதாவது:
கரோனா வைரஸ் நாடு முழுதும் பரவி வருகிறது, எனவே விஸ்வநாதக் கடவுள் சிலைக்கும் முகமூடி அணிவித்துள்ளேன். இது எதற்காகவென்றால் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுக்காகத்தான். பக்தர்கள் தெய்வச் சிலைகளை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். சிலைகளை தொட்டால் வைரஸ் பரவிவிடும்.
கோயில்களில் குருக்கள்களும், பக்தர்களும் முகமூடி அணிந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார் ஆனந்த் பாண்டே.