Published : 10 Mar 2020 10:21 AM
Last Updated : 10 Mar 2020 10:21 AM

கவுரவக்கொலை செய்த தந்தை தற்கொலை: இறுதிச் சடங்கில் மகளுக்கு அனுமதி மறுப்பு

என். மகேஷ்குமார்

தெலங்கானா மாநிலம், நல் கொண்டா மாவட்டம், மிரியாலா கூடாவை சேர்ந்தவர் தொழிலதிபர் மாருதிராவ். இவரது மகள் அமிர்தா. இவர் பிரணய் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத மாருதிராவ், மருமகன் பிரணயை கொல்ல திட்டமிட்டார்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்.மாதம் 14-ம் தேதி, 3 மாத கர்ப்பிணியாக இருந்த அமிர்தாவைபிரணய், மிரியால கூடாவில் உள்ளஒரு தனியார் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து சென்றார். அப்போதுமருத்துவமனையின் வெளியே நடந்து சென்று கொண்டிருந்த பிரணயை, மாருதிராவ் அனுப்பிய கூலிப்படையினர், அமிர்தாவின் கண்ணெதிரிலேயே கொலை செய்தனர்.

இந்தக் கவுரவக்கொலை வழக்கில் மாருதிராவ் உள்பட கூலிப்படையை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்துசிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தனக்கு ஆதரவாக சாட்சி அளித்தால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அமிர்தாவுக்கு வழங்குவதாக தெரிந்தவர்கள் மூலம் மாருதி ராவ் தனது மகளுக்கு தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க அமிர்தா மறுத்து விட்டார்.

இதையடுத்து மாருதிராவை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்து வாரங்கல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் மாருதி ராவ் 7 மாத சிறை தண்டனைக்குப் பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கைதராபாத் பகுதியில் உள்ள ஆரிய வைசிய பவனுக்கு சென்று இரவு அங்கு தங்கிய மாருதி ராவ், உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், மாருதி ராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு மிரியாலகூடாவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அமிர்தா கேட்டுக் கொண்டார்.

இதனால் அமிர்தாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மிரயால கூடாவில் உள்ள மயானத்தில் மாருதிராவ் இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் மாருதிராவின் சித்தப்பாஆகியோர், அமிர்தா இறுதிச்சடங்குக்கு வரக்கூடாது எனக்கூறி சத்தமிட்டனர்.

இதையடுத்து அமிர்தா போலீஸாரின் வாகனத்தில் ஏறி அழுதுகொண்டே புறப்பட்டு சென்றார். மாருதி ராவுக்கு ரூ. 200 கோடிக்கும் மேல் சொத்துகள் உள்ள நிலையில் அவர் இருக்கும்போது ஒரு முறை கூட வந்து பார்க்காதமகளை, இறந்த பிறகு சொத்துக்காக அவரது மாமியார் வீட்டார் அனுப்பி வைத்திருப்பதாக அவரதுஉறவினர்கள் குற்றம் சாட்டினர். என். மகேஷ்குமார்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x