

ம.பி. காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்ய சிந்தியா 17 எம்.எல்.ஏ.க்களுடன் கர்நாடகாவுக்குச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மாஃபியாக்கள் உதவியுடன் ம.பி. காங்கிரஸ் ஆட்சியைக் கவிழக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் பாஜகவின் இந்த முயற்சியை முறியடிப்போம், இதில் அவர்கள் வெற்றி பெற முடியாது என்றார் கமல்நாத். 15 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியில் மத்தியப் பிரதேசத்தில் பலதுறைகளிலும் மாஃபியாக்கள் கிட்டத்தட்ட இணை அரசாகவே செயல்பட்டு வந்தனர். "மக்கள் மாஃபியா ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே காங்கிரஸ் சார்பாக வாக்களித்தனர். மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க நான் மாஃபியாக்களுக்கு எதிராகத்தான் பிரச்சாரம் செய்தேன்.
பாஜகவுக்கு அதிகார வெறியை விட்டால் வேறு குறிக்கோள்கள் கிடையாது, மத்தியப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் ஆட்சியைத் தொடர முயற்சி செய்கின்றனர். கடந்த சில மாதங்களில் 7 மாநிலங்களில் அவர்கள் ஆட்சியை இழந்துள்ளனர்.
அதனால் வெறுப்படைந்த பாஜகவினர் மாற்று ஆட்சியை நடத்த விடாமல் முதல் நாளிலிருந்தே செயல்பட்டு வருகின்றனர்” என்று கமல்நாத் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.