Last Updated : 27 Aug, 2015 10:43 AM

 

Published : 27 Aug 2015 10:43 AM
Last Updated : 27 Aug 2015 10:43 AM

மத அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: முஸ்லிம்கள் எண்ணிக்கை 0.8 % அதிகரிப்பு - இந்து மக்கள் எண்ணிக்கை குறைந்தது

இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் அதிகரித்து 17.22 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்து மக்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் குறைந்து 96.63 கோடியாக சரிந்துள்ளது.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதரீதியில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறை கமிஷனர் நேற்று வெளியிட்டார். அதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

2001-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 13.8 கோடியாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத் தில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கிறிஸ்தவ, ஜெயின் மதத்தவரின் எண்ணிக் கையில் மாற்றம் ஏதும் இல்லை.

நமது நாட்டின் மொத்த மக்கள் தொகை 121.09 கோடியாகும். இதில் இந்துக்களின் எண்ணிக்கை 96.63 கோடி (79.8 சதவீதம்), முஸ்லிம் களின் எண்ணிக்கை 17.22 கோடி (14.2 சதவீதம்), கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடி (2.3 சதவீதம்), சீக்கியர்கள் 2.08 கோடி (1.7 சதவீதம்), புத்த மதத்தவர் 0.84 கோடி (0.7 சதவீதம்), ஜெயின் மதத்தவர் 0.45 (0.4 சதவீதம்), மற்ற மதத்தினர் 0.79 கோடி (0.7 சதவீதம்), மதத்தை குறிப்பிடாதவர்கள் 0.29 கோடி (0.2 சதவீதம்).

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்துக் களின் எண்ணிக்கை 0.7 சதவீதமும், புத்த மதத்தவர் எண்ணிக்கை 0.1 சதவீதமும் குறைந்துள்ளது. கிறிஸ் தவ, ஜெயின் சமூக மக்கள்தொகை யில் பெரிய மாற்றம் இல்லை.

2001-ம் ஆண்டு கணக்கெடுப் பின்படி மொத்த மக்கள்தொகை 102 கோடியாக இருந்தது. இதில் இந்துக்களின் எண்ணிக்கை 82.75 கோடி (80.45 சதவீதம்) முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.8 கோடி (13.4 சதவீதம்).

2001 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.7 சதவீதமாகும். இந்துக்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் 16.8 சதவீதமாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் 24.6 சதவீதமாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி 15.5 சதவீதமாகவும், சீக்கியர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாகவும், புத்த மதத்தினர் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாகவும், ஜெயின் மதத்தினர் வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாகவும் உள்ளது.

கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திமுக, சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஜாதிவாரியாகவும் மக்கள் தொகை விவரத்தை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x