Last Updated : 07 Mar, 2020 07:43 PM

 

Published : 07 Mar 2020 07:43 PM
Last Updated : 07 Mar 2020 07:43 PM

கரோனா வைரஸ் அச்சம்: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை: உயரதிகாரிகளுக்கு உத்தரவு

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

நாட்டில் கரோனா வைரஸ் பரவி வருவது குறித்தும், அதைத் தடுக்கும் முயற்சிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தி, விவரங்களை கேட்டறிந்தார்

போதுமான அளவுக்குத் தடுப்பு மருந்துகள், பரிசோதனைக் கூடங்கள், படுக்கை வசதிகள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்குப் பிரமதர் மோடி உத்தரவிட்டார்.

சீனாவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸ் உலகில் 91 நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 3,400 பேர் பலியாகியுள்ளார்கள், உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையே கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம், தடுப்பு நடவடிக்கைகள்,பரிசோதனைக் கூடங்கள், படுக்கைகள் போன்றவை குறித்து அறிய அமைச்சர்கள், உயரதிகாரிகள் கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன், இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, நிதிஆயோக் உறுப்பினர் வினோத் பால், தலைமை பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத், சுகாதாரத்துறை, மருந்துத்துறை, விமானப்போக்குவரத்து, வெளியுறவு, சுகாதார ஆய்வு, உள்துறை, கப்பல் போக்குவரத்து, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்

இந்த கூட்டத்தில் பிரதம் மோடி பேசுகையில், " மருத்துவ வல்லுநர்கள் ஒப்புதல் பெற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்து அறியவும், மக்களை அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கவும் அறிவுரை கூறினார். மக்கள் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதுகுறித்து அறிவுறுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அனைத்து துறைகளும் கரோனா வைரஸை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள், மக்களிடம் விழிப்புணர்வை அதிகமாக ஏற்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டார்

மேலும், உலகளவில் கரோனா வைரஸை தடுக்கும் முறைகளைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

எந்த மாதிரியான திட்டமிடல்கள் இருக்கின்றன, போதுமான அளவு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதா, பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பிரித்து தனியாகச் சிகிச்சை அளிப்பது அதற்குரிய இடம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

ஈரானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை விரைவாக மீட்பதற்கான வழிகளைக் கண்டறியவும் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்

சுகாராத்துறை செயலாளர் பிரீத்தி சூடான் விடுத்த அறிவிப்பில் " கரோனா வைரஸ் குறித்து எவ்வாறு தயாராகி இருக்கிறோம், என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்போகிறோம், மற்ற அமைச்சகங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆகியவை பேசப்பட்டது.

வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குள் நுழையும் முக்கியப் பகுதி, பரிசோதனைக் கூடம், மருத்துவமனைகள், போக்குவரத்து வசதிகள், தகவல்தொடர்பு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, எவ்வளவு மருந்துகள் எத்தனை நாட்களுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன போன்றவை கேட்டறியப்பட்டது. அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், எல்லைப்பகுதிகள் ஆகியவற்றில் தீவிரமான கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x