Last Updated : 07 Mar, 2020 06:53 PM

 

Published : 07 Mar 2020 06:53 PM
Last Updated : 07 Mar 2020 06:53 PM

என்னிடமே பிறப்புச் சான்றிதழ் கிடையாது; எப்படி என் தந்தையின் பிறப்பை நிரூபிப்பேன்: என்பிஆர் குறித்து தெலங்கானா முதல்வர் காட்டம்

தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்

ஹைதராபாத்

என்னிடமே பிறப்புச் சான்றிதழ் கிடையாது. என் தந்தையின் பிறப்புச் சான்றிதழ் கேட்டால் நான் எங்கு செல்வது என தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) குறித்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் சிஏஏ மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நடந்த விவாதத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது:

''மத்திய அரசு கொண்டுவரும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக வலிமையான தீர்மானம் இயற்றி நாட்டுக்குச் செய்தி சொல்ல வேண்டும்.

என்னிடம் கூட பிறப்புச் சான்றிதழ் கிடையாது, பின் என் தந்தையின் பிறந்த இடம், பிறந்த தேதியை நான் எவ்வாறு நிரூபிக்க முடியும். எனக்குக் கூட என்பிஆரை நினைத்து கவலையாகத்தான் இருக்கிறது. நான் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள என்னுடைய வீட்டில் பிறந்தேன். அப்போது மருத்துவமனைகள் கிடையாது. அப்போது கிராமத்தில் உள்ள பெரியவர்கள், ஜென்மநாமா என்று பிறப்பு குறித்து எழுதிக்கொடுப்பார்கள். அதற்கு அரசின் அதிகாரபூர்வ முத்திரை இருக்காது.

நான் பிறந்தபோது என் குடும்பத்தில் 580 ஏக்கர் நிலம், கட்டிடம் எல்லாம் இருந்தது. இருந்தும் என்னால் பிறப்புச் சான்றிதழைத் தர முடியவில்லை. பின் எவ்வாறு பட்டியலினத்தில் உள்ள மக்கள், பழங்குடியினர், ஏழை மக்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழை வழங்க முடியும்.

டிஆர்எஸ் கட்சிக்கு தனியாகக் கொள்கைகள், சித்தாந்தங்கள் இருக்கின்றன, அதில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மிகவும் எரிச்சல் அடையவைக்கும் சட்டம். இந்திய அரசியலமைப்பின் ஒவ்வொரு பிரிவுக்கும் விரோதமாக அந்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அனைத்து மக்களையும் சமமாக, சாதி, மத வேறுபாடின்றி நடத்த வேண்டும் என்பதற்கு விரோதமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் ஒதுக்கி வைக்கும் சட்டத்தை எந்தப் பண்பட்ட சமூகமும் ஏற்கமாட்டார்கள்.

என்பிஆர், சிஏஏ ஆகியவை குறித்து இந்தப் பேரவை தீவிரமாக விவாதித்து தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கும், தேசத்துக்கும் வலிமையான செய்தியைக் கூறும்.

சிஏஏ என்பது நாட்டின் எதிர்காலம், சர்வதேச அளவில் நாட்டின் தோற்றத்தைப் பிரதிபலிக்கக்கூடியது. இதுபோன்ற சட்டத்தால்தான் ஐ.நா. சபை உள்ளிட்ட உலக அமைப்புகளில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது. நாங்களும் இந்த நாட்டின் ஒரு அங்கம். நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். யாருக்கும் அஞ்ச மாட்டோம்.

சிஏஏ சட்டத்தால் தலைநகரில் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள். இது சாதாரண விஷயம் அல்ல. இந்த தேசத்தில் இப்போது நடக்கும் இந்த விவாதம் முக்கியமானது.

சிஏஏ குறித்து நாடாளுமன்றத்திலும் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். சட்டப்பேரவையிலும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவோம். 6 மாநிலங்கள் வரை சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதேபோல நாங்களும் நிறைவேற்றுவோம்’’.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x