

எல்லோரையும் வரவேற்கும் ஒரு நாட்டை இந்த உலகில் காட்டுங்கள். எந்த நாடும் அனைவரையும் வரவேற்காது என்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு நகரங்களில் போராடி வருகின்றனர். டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சிஏஏவுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கில் ஏற்பட்ட வகுப்புவாதக் கலவரத்தில் 46 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் எக்னாமிக் டைம்ஸ் சார்பில் சர்வதேச வர்த்தக மாநாடு நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலமாக நாடு இழந்திருக்கும் மக்களுக்கு அடையாளம் அளித்து அவர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முயல்கிறோம். அதை மக்கள் அனைவரும் வரவேற்க வேண்டும். நமக்கு எந்தவிதமான பிரச்சினையும் உருவாக்காத வகையில், அந்தச் சட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் குடியுரிமையை எதிர்நோக்கும்போது, சில வரையறைகளை எதிர்கொள்கிறார்கள். அனைவரையும் வரவேற்று ஏற்றுக்கொள்ளும் உலகில் ஒரு நாட்டைக் காட்டுங்கள் பார்க்கலாம். எந்த நாடும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளாது.
ஐநா மனித உரிமை கவுன்சில் தலைவர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை. அது பிரச்சினையல்ல. எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டபோது அது குறித்து மனித உரிமை ஆணையம் ஏதும் செய்ததா? கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தைத் தவறாகவே மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கையாண்டுள்ளார்''.
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.