சர்வதேச மகளிர் தினம்; நினைவுச் சின்னங்களை நாளை கட்டணமின்றி பெண்கள் பார்வையிடலாம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் கீழ் உள்ள நினைவுச்சின்னங்களை நாளை அனைத்துப் பெண்களும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் ஆண்டுதோறும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் சர்வதேச மகளிர்தினம் முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய ரயில்வே துறை திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க பெண்களிடமே ஒப்படைத்தது. பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனது சமூக ஊடக கணக்குகளை பெண்களிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்திற்கு மத்திய கலாச்சார அமைச்சகம் அளிக்கும் முக்கித்துவம் குறித்து அமைச்சர் பிரஹ்லாத் படேல் சனிக்கிழமை கூறியதாவது:

சர்வதேச மகளிர் தினமான நாளை மார்ச் 8 முன்னிட்டு, முதன்முறையா இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களிலும் பெண்கள் பார்வையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது.

இந்திய தொல்பொருள் ஆய்வின்கீழ் இடம்பெறும் அனைத்து நினைவுச்சின்னங்களிலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பாதுகாக்கப்பட்ட தனியறைகளைஉருவாக்கப்பட்டு வருகிறது.

நம் நாட்டில், சர்வதேச மகளிர் தினம் உருவாவதற்கு முன்பே பெண்கள் வணங்கப்படுகிறார்கள். நம் கலாச்சாரத்தில், பண்டைய காலங்களிலிருந்து பெண்களுக்கு தெய்வங்களின் நிலை உண்டு. இது ஒரு சிறந்த முயற்சி.

இவ்வாறு மத்திய அமைச்சர் பிரஹ்லாத் படேல் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in