

நான் கடவுளை உங்கள் உருவில் பார்க்கிறேன் என்று ஜன் அவுஷதி திட்டத்தின் பயனாளியான பெண் ஒருவர் கூறிய வார்த்தையைக் கேட்ட பிரதமர் மோடி, நெகிழ்ச்சியில் கண் கலங்கினார்.
மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் குறைந்தவிலை மருந்துக் கடைகள் ஜன் அவுஷதி கடைகளாகும். மத்திய அரசின் ஜன் அவுஷதி கேந்திரா (மருந்துக்கடை) நடத்தும் உரிமையாளர்கள், பிரதமர் தேசிய ஜன் அவுஷதி பரியோஜனா (பிஎம்பிஜேபி) திட்டத்தின் பயனாளிகளிடம் பிரதமர் மோடி நேரடியாக வீடியோ கான்பிரஸிங் மூலம் இன்று உரையாடினார்.
அப்போது டேராடூனைச் சேர்ந்த தீபா ஷா எனும் பெண், பிரதமர் மோடியிடம் பேசினார். தீபா ஷா கடந்த 2011-ம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவரின் கணவர் மாற்றுத்திறனாளி. தொடக்கத்தில் தனது பக்கவாதத்துக்கு மருந்துகள் வாங்க அதிகமாக செலவிட்டத்தையும், மத்திய அரசின் ஜன் அவுஷதி கடைகள் வந்தபின் குறைந்த விலையில், தரமான மருந்துகள் கிடைக்ககப் பெற்றதையும் புகழ்ந்தார்.
அப்போது தீபா ஷா பேசுகையில், "கடந்த 2011-ம் ஆண்டு எனக்குப் பக்கவாதம் வந்தது. எனக்குத் தேவையான மருந்துகளை வாங்க எனக்கு அப்போது ரூ.5 ஆயிரம் மாதத்துக்குத் தேவைப்பட்டது. ஆனால், மத்திய அரசு ஜன் அவுஷதி மருந்துக்கடைகள் வந்தபின் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கின்றன. இப்போது எனக்கு மாதத்துக்கு ரூ.1500 மட்டுமே மருந்து வாங்கச் செலவாகிறது. மீதமுள்ள ரூ.3500 பணத்தை வீட்டுச் செலவுக்குப் பயன்படுத்துகிறேன்.
நான் கடவுளை நேரடியாகப் பார்த்தது இல்லை. ஆனால், உங்கள் உருவில் கடவுளை நேரடியாக இப்போது காண்கிறேன்" எனத் தொடர்ந்து கூறி கண்ணீர் வி்ட்டு அழுதார்.
இதைக் காணொலிக் காட்சி மூலம் பார்த்த பிரதமர் பிரதமர் சில வினாடிகள் பேசாமல் அமைதியானார். அவரின் குரலும் தழுதழுத்தது. கண்ணீர் பெருகியது.
மேலும், உத்தரகாண்ட் முதல்வருக்கும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அந்தப் பெண் தெரிவித்தார். ஒருகட்டத்தில் மருத்துவர்கள் தன்னைப் பரிசோதித்துவிட்டுக் குணமாக்குவது கடினம் என்ற நிலையில் இன்று முழு உடல்நலத்துடன் இருக்கிறேன். உங்கள் குரலை இப்போது நன்றாகக் கேட்க முடிகிறது என்று பிரதமர் மோடியிடம் தீபா ஷா தெரிவித்தார்.
பிரதமர் மோடி, தீபா ஷாவிடம் பேசுகையில், "நோயிலிருந்து துணிச்சலுடன் போராடி மீண்டு வந்துள்ளீர்கள். இந்த மன உறுதியைக் கைவிடாதீர்கள். உங்கள் மன உறுதிதான் உங்களுக்குக் கடவுள். மிகப்பெரிய பிரச்சினையில் இருந்து மீண்டு வர நிச்சயம் துணிச்சல் உதவும். நீங்கள் நின்று கொண்டு பேச வேண்டாம். இருக்கையில் அமர்ந்தவாறு பேசுங்கள். இந்த நம்பிக்கையை எப்போதும் உடன் வைத்துக்கொள்ளுங்கள்.
சிலர் ஜெனரிக் மருந்துகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். எவ்வாறு இந்த அளவுக்கு மலிவாக மருந்துகளை விற்பனை செய்ய முடியும் என்றும் இந்த மருந்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றும் கூறினர்.
ஆனால், உங்களைப் போன்ற மனிதர்களைப் பார்த்தபின், இதுபோன்ற ஜெனரிக் மருந்துகளில் எந்தவிதமான குறைபாடும் இல்லை, தரமாக இருக்கிறது என்பது தெரியவருகிறது. சிறந்த சோதனைக் கூடங்களால் மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. அதனால் மலிவாகத் தர முடிகிறது.
இந்தியாவின் ஜெனரிக் மருந்துகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளைத் தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது கட்டாயமாகும்" என்று மோடி தெரிவித்தார்.