

பிரதமர் மோடியின் தீவிரமான கண்காணிப்புக்கு உரிய ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு வெடிகுண்டு தாக்குதலோ, குண்டுவெடிப்போ நடக்கவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
தேசிய அளவில் ஜன் அவுஷதி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜன் அவுஷதி குறித்து பிரதமர் மோடி காணொலியில் ஜன் அவுஷதி உரிமையாளர்களுக்கும், பயனாளிகளுக்கும் உரையாற்றினார்.
இதனிடையே புனேவில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கல்லூரியில் இன்று ஜன் அவுஷதி நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது
''பிரதமர் மோடி அரசின் மந்திரமே குறைந்த செலவில், ஏழை, எளிய மக்களுக்குத் தரமான மருந்துகளும், மருத்துவச் சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பதுதான். இதற்காக பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய அரசு தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக உயிர் காக்கும் கருவிகளான ஸ்டெனட்ஸ், உறுப்பு மாற்று சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளன. மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜன் அவுஷதி மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன. ஆயுஷ் பாரத் திட்டத்தின் மூலம் யோகா கலையும் பரப்பப்பட்டது,
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன், அதாவது கடந்த 25 ஆண்டுகளாக மோடி அரசு ஆட்சி வருவதற்கு முன், நாட்டின் பல்வேறு இடங்களில், நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல்களும், குண்டுவெடிப்புகளும் நடந்தன. புனே, வதோதரா, அகமது நகர், டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் அடிக்கடி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
ஒவ்வொரு 10 நாட்களுக்கு இடையே ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. அதில் அப்பாவி மக்கள் பலியாகிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த 6 ஆண்டுகளில் எந்தவிதமான குண்டுவெடிப்பும் நிகழவில்லை. தீவிரமான பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டதுதான் காரணமாகும். அதுமட்டுமல்லாமல் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைத் தீவிரமாக்கி, அதற்கு அதிகமான முக்கியத்துவத்தை மோடி அரசு வழங்கியது''.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.