Last Updated : 12 Aug, 2015 09:31 AM

 

Published : 12 Aug 2015 09:31 AM
Last Updated : 12 Aug 2015 09:31 AM

இந்தியாவில் ஒரு சதவீத மக்களே உறுப்பு தானம் செய்கிறார்கள்: மருத்துவர்கள் கவலை

நாட்டில் ஒரு சதவீத மக்கள் மட்டுமே இறந்த பிறகு தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார்கள் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் மாற்று சிறுநீரகத்துக்காகவும், சுமார் 1 லட்சம் பேர் மாற்று கல்லீரலுக்காகவும் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவ்வளவு தேவையில், இரண்டு அல்லது மூன்று சதவீதம் மட்டுமே நிறைவேறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள பிஎல்கே மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் அங்கூர் கார்க் கூறும்போது, "நம் நாட்டில் உறுப்பு தானங்கள் அதிகரிக்காமல் இருப்பதற்கு மூடநம்பிக்கைகளே காரணம். கடந்த சில ஆண்டுகளாக உறுப்பு தானத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இறந்த பிறகும் அந்த நபரின் உறுப்புகளைத் தானம் தருவதற்கு அவரின் உறவினர்கள் தயாராக இல்லை. இந்த நிலையைப் போக்க, உறுப்பு தான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர‌ வேண்டும்" என்றார்.

"வெளிநாடுகளில், ஒரு நபர் இறந்த பிறகு அவரின் உடலுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கிறது. அதனால் அவரின் உறுப்புகளை எடுத்து தானம் செய்ய முடிகிறது. எனவே, இந்தியாவை விட மற்ற நாடுகளில் உறுப்பு தானம் சிறந்து விளங்குகிறது" என்கிறார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் பிரியான்ஷு ரெய்னா.

மேலும் அவர் கூறும்போது, "எய்ம்ஸ் உறுப்பு தான வங்கிக் கணக்குப் படி, 2010-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 22,500 பேர் தாங்கள் இறந்த பிறகு தங்களின் உறுப்புகளை தானம் தர பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியா போன்ற ஓர் ஆன்மிக தேசத்தில், உறுப்பு தானத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத குருமார்களை துணைக்கு அழைக்கலாம். ஏனென்றால், உறுப்பு தானம் அளிப்பதை ஒரு பாவச் செயலாக பலர் கருதுகின்ற னர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x