Published : 07 Mar 2020 08:05 AM
Last Updated : 07 Mar 2020 08:05 AM

மக்களவையில் நடந்த அமளி பற்றி விரிவாக ஆராய ஓம் பிர்லா தலைமையில் அனைத்து கட்சி குழு: நாடாளுமன்றம் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. படம்: பிடிஐ

புதுடெல்லி

தொடர் அமளியால் மக்களவை முடங்கிய நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் அவையில் நடந்த விஷயங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்வதற்காக அனைத்துக் கட்சிக் குழு அமைக் கப்படவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுகடந்த திங்கள்கிழமை தொடங்கியது. எனினும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்றைய கூட்டமும் எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாததால் பாஜக எம்.பி. கிரித் சோலங்கி தலைமை யில் மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது.

அலுவல் பணிகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, காங்கிரஸ், திமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.

இதையடுத்து, அவை நண்பகல் 12 மணிக்கும், பின்னர் மதியம் 2 மணிக்கும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என திமுக, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அப்போது அவர்களுக்கு பதில் அளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத்ஜோஷி, "அவையின் மாண்புகளுக்கு முற்றிலும் முரணாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொண்டகாரணத்தாலேயே காங்கிரஸ்எம்.பி.க்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த தவறும் இல்லை’’ என்றார். இதனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தலையிட்ட கிரித் சோலங்கி, "மக்களவையில் கடந்த 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரைஎன்ன நடந்தது என்பது குறித்துவிரிவான ஆய்வு மேற்கொள்வதற் காக சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுஅமைக்கப்படும்’’ என்றார். இதனைத் தொடர்ந்து, மக்களவை வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவை யிலும் நேற்று அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 11-ம் தேதி அவைமீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x