

கர்நாடகா மாநிலம் துமகூரு அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (35). விவசாயியான இவர், தனது 11 மாத குழந்தை சைத்தன்யா ஈஸ்வருக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக உறவினர்கள் 12 பேருடன் ராஜேந்திரன் என்பவரின் காரில் கர்நாடகாவின் மங்களூரு அருகே உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலுக்கு கடந்த 4-ம் தேதி சென்றார்.
நேற்று முன்தினம் காலையில் சிறப்பு வழிபாடு முடித்துவிட்டு, மாலையில் அதே காரில் அவர்கள் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் துமகூருவை அடுத்துள்ள குனிகல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு மறுபக்கம் எதிர்திசையில் வந்த காரின் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் மஞ்சுநாத்(35), அவரது மனைவி தனுஜா (28), மகள் மாலா ஸ்ரீ (4), சைத்தன்யா ஈஸ்வர் (11 மாத ஆண் குழந்தை), உறவினர் சவுந்தர்ராஜ் (48), அவரது மகள் திரிசன்யா (13), உறவினர்கள் கவுரம்மா (55) ரத்தினம்மா (60), சரளா (32), ஓட்டுநர் ராஜேந்திரன் (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல, மற்றொரு காரில் வந்த கர்நாடகாவைச் சேர்ந்த லக்ஷ்மி காந்த் (24), சந்தீப் (36), மது (28) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவஇடத்துக்கு வந்த அர்மத்தூர் போலீஸார், படுகாயமடைந்த ஹர்சிதா, ஸ்வேதா, கங்கோத்ரி ஆகிய மூவரையும் மீட்டு, நெலமங்களாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த 10 பேரின் உடல்களும் சொந்த ஊரான சிக்கனப்பள்ளி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். இரா.வினோத் / எஸ்.கே.ரமேஷ்