

ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசியமக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) பணிகளை தொடங்குவதில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 14 பக்கங்கள் கொண்டஅந்த சுற்றறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறுநடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பதிவாளர் ஜெனரல் விவேக் ஜோஷி கண்காணிக்க உள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ம் தேதிதொடங்கி செப்டம்பர் மாதம்வரை முதல் கட்டப் பணியும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 2-வது கட்ட பணியும் நடைபெற உள்ளது.
முதல் கட்டப் பணியோடு சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பையும் நடத்துவதில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டப் பணியில் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 2-வது கட்ட பணியின்போது நேரடியாக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 34 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் 31 கேள்விகளின் விவரங்களையும் மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் 3 கேள்விகளின் விவரம் வெளியிடப்படவில்லை.
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்படுகிறது. அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணியைத் தொடங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஆயத்தமாகியுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் சிரமமின்றி நடைபெற மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகளுக்காக மாநில அளவில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன், மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பணிகளை சுமூகமாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஆயத்தப் பணிகளுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம்டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள்தொகை பதிவேட்டு (என்பிஆர்) பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளின்போது வீடுகள் கணக்கெடுப்பு பணியும், என்பிஆர் பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்தப் பணிகள் குறித்தும், மாநிலங்களில் தற்போதைய நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் தொகைப் பதிவேடு பணிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளன. மீதம் உள்ள மாநிலங்களில் உள்ள நிலை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்தொற்றுமை தேவை
இதனிடையே, மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் விவகாரம் தொடர்பாக தேசிய அளவில் கருத்தொற்றுமை தேவை என்று மத்திய அரசிடம் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலைக்குழுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைவராக உள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் விவகாரம் குறித்து உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையில் நிலைக்குழு கூறியிருப்பதாவது: மக்கள் தொகைகணக்கெடுப்பு, என்பிஆர் பணிகளில் மக்களிடையே அதிருப்தி மற்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக நாட்டு மக்களிடையே முழுமையான தெளிவைஏற்படுத்த வேண்டும். மக்களிடையே தோன்றியுள்ள அச்சத்தை நீக்கவேண்டும். எனவே இந்த விவகாரங்கள் தொடர்பாக தேசிய அளவில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
எனவே அந்தப் பணிகளில் அமைச்சகம் ஈடுபடவேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தேசிய அளவிலான கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்கிறது. இவ்வாறுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.