கரோனா வைரஸ்  இந்தியாவில் 31 பேருக்கு உறுதி; விமான நிலையங்களில் கடும் சோதனை: மத்திய அரசு தகவல்

கரோனா வைரஸ்  இந்தியாவில் 31 பேருக்கு உறுதி; விமான நிலையங்களில் கடும் சோதனை: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

கோவிட்-19 என்று அழைக்கப்படும் கரோனா வைரஸ் தொற்று மேலும் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் செய்தித்துறை தகவல்:

“கோவிட்-19 நோய்த் தொற்று மேலும் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் பயணம் மேற்கொண்டவர் ஆவார்.

இவர் மருத்துவமனையின் தனிமைப் பகுதியில் சிசிக்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளது. இதையும் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று 31 பேருக்கு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 16 பேர் இத்தாலிய நாட்டவர்கள்.

தற்போதைய உத்தரவின்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் அவர்களுக்கு இந்த நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.

சோதனை செய்வதற்கான போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 9 விமான நிலையங்களுக்கு இந்த சோதனை விரிவாக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து இன்றைய நிலையில் மொத்தம் 30 விமான நிலையங்களில், வந்து சேரும் சர்வதேச பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும், கோவிட்-19 குறித்த ஒரு நாள் தேசியப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் குடும்பநல அமைச்சகமும் உலக சுகாதார அமைப்பும் இந்தப் பயிற்சியை இணைந்து நடத்துகின்றன. இன்று புதுடெல்லியில் சுகாதாரத்துறை செயலாளர் ப்ரீத்தி சூடன் இந்தப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

அனைத்து மாநிலங்கள், ரயில்வே பாதுகாப்பு, இணை ராணுவ அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவமனைகளின் ஆகியவற்றின் சுகாதார அதிகாரிகள் 280 பேர் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். மெய்நிகர் வழியாக நாடெங்கும் உள்ள மையங்களில் மேலும் ஆயிரம் பேர் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர்”.

இவ்வாறு மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in