

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில், இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளை வீடியோ பதிவாகச் செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்தார்த் மிருதுள், ஐஎஸ் மேத்தா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு வன்முறையில் பலியானோர் அனைவரது டி.என்.ஏ. மாதிரிகளைப் பராமரிக்கவும், அடுத்த புதன் கிழமை வரை அடையாளம் தெரியாத எந்த உடலையும் அப்புறப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த விசாரணை புதன் கிழமை நடைபெறுகிறது.
அதே போல் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவது பற்றியும் டெல்லி போலீஸ், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர் நீதிமன்றம்.
வன்முறைகளின் போது தன் உறவினர் ஒருவர் காணமால் போனதாகவும் அவரை மீட்டுக் கொண்டு வருமாறு ஆட்கொணர்வு மனு மேற்கொண்டார் ஒரு நபர், இதனையடுத்து இந்த அதிரடி உத்தரவுகளை கோர்ட் பிறப்பித்துள்ளது.
மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் மேற்கொண்ட பொதுநல மனுவில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதனையடுத்து ஹரி சங்கர், படேல் ஆகியோர் அடங்கிய அமர்வு டெல்லி போலீஸாருக்கு, டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
அதே போல் கைது செய்யப்பட்டவர்களின் பெயர், எண்கள் அடங்கிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.