Published : 06 Mar 2020 01:03 PM
Last Updated : 06 Mar 2020 01:03 PM

கர்நாடகாவில் முழுவதும் பெண்களே இயக்கும் திப்பு எக்ஸபிரஸ் ரயில்

பெண்களே இயக்கும் திப்பு எக்ஸ்பிரஸ் பணியாளர் குழுவில் இடம் பெற்றுள்ள லோகோ பைலட்கள். | படம்: எம்.ஏ.ஸ்ரீராம்.

மைசூரு

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மைசூரு - பெங்களூரு திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை பெண்கள் மட்டுமே இயக்குவதற்கான முழுப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் வரும் மார்ச் 8-ம் தேதி (ஞாயிறு அன்று) கொண்டாடப்பட உள்ளது. எனினும் அதற்கு முன்னதாகவே பெண்களுக்கான வாரமாக இந்த வாரம் அமையும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிள்ளதாவது:

''பெண்கள் அதிகாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே துறை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மார்ச் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிகளில் சுகாதாரப் பரிசோதனைகள், யோகா முகாம்கள், மலையேற்றம், கலாச்சார மற்றும் விளையாட்டுப் போட்டிகள், பாலினப் பாகுபாடின்றி சமமான பணியிடத்தை உருவாக்குதல் மற்றும் பெண்கள் அதிகாரச் சிந்தனைக்கு மரியாதை செலுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்திய ரயில்வே துறை மகளிர் தினக் கொண்டாட்டங்களை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. சர்வதேச மகளிர் தின பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை பெண்களே இயக்க அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மைசூரு பிரதேச ரயில்வே மேலாளர் அபர்ணா கார்க், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மைசூரு, ஏ.தேவாசஹயம், மூத்த கிளை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ரயில்வே கோட்டத்தின் பெண் ஊழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

கர்நாடகாவில் இயங்கிவரும் மைசூரு - பெங்களூரு திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்கான பொறுப்பேற்றுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்:

லோகோ பைலட் பி.சிவ பார்வதி, உதவி லோகோ பைலட், ரங்கோலி பாட்டீல், காவலர் ரிச்சாமணி சர்மா, பயண டிக்கெட் தேர்வாளர் காயத்ரி. பெண்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் புஷ்பம்மா, ராஜேஸ்வரி, கே.எம். ஹனி, என்.எஸ். அனிதா மற்றும் பெட்ஸி. ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் கெத்தா லதா நாயக், தேவகி, பாரதி மற்றும் ரேணுகா''.

இவ்வாறு இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணிச்சூழலில் பாலின சமத்துவம்: ரயில்வே மேலாளர் அபர்ணா கார்க் கருத்து

'’மைசூரு - பெங்களூரு திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்கான பெண்கள் குழுவைத் தேர்வு செய்த மைசூரு பகுதி ரயில்வே மேலாளர் அபர்ணா கார்க் கூறியதாவது:

மைசூரு ரயில்வே கோட்டத்தில் உள்ள பெண்கள் குழுவை ஆய்வு செய்து ரயிலை பெண்களே இயக்குவதற்கான ஒரு குழுவில் சில பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாலினப் பாகுபாடின்றி பெண்களும் பணிச்சூழலில் இடம்பெறும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மைசூரு ரயில்வே கோட்டத்தில் 10%க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

பணியிடங்களில் பாலின-சமத்துவ சூழலை உருவாக்குவதன் மூலம் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் சிறந்த சேவையை அளிக்க முடியும். பெண்களின் முதன்மை கவனம் பணியில் ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டு வருவதாகும். ஊழியர்களிடையே கூட்டு மனோபாவத்தை ஊக்குவிப்பது ரயில்வே கோட்டத்தின் நெறிமுறைகளில் ஒன்றாகவே உள்ளது.

பெண்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்வதை விட அவர்கள் பணியாற்றும் விதமே அதை வெளிப்படுத்தி வருகிறது. மேலும், ஒவ்வொருவரும் அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். இதனால் ரயில்வே வழங்கும் சேவையின் தரத்தில் தெளிவான மாற்றம் ஏற்படும்''.

இவ்வாறு ரயில்வே மேலாளர் அபர்ணா கார்க் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x