

நாடாளுமன்ற மக்களவையிலும் கோவிட்-19 வைரஸ் தொடர்பான சர்ச்சை கிளம்பி உள்ளது. இத்தாலி சென்று திரும்பியதால் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்திக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்விலும் கோவிட்-19 வைரஸ் தடுப்புநடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மீது இருஅவைகளிலும் மத்திய அமைச்சர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். எனினும், தினமும் நாடாளுமன்றத்துக்கு வரும் எம்.பி.க்கள்சிலரிடையே கோவிட்-19 வைரஸ்அச்சத்தைக் காண முடிந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் வழக்கமாக கட்டிப்பிடித்தும், கைகளைக் குலுக்கியும் மகிழ்ச்சியையும், நட்பையும் பறிமாறிக் கொள்பவர்கள் சற்று விலகியே இருந்து வருகின்றனர்.
வழக்கமாக எம்.பி.க்கள் அரசியல் குறித்து விவாதிப்பர். ஆனால்இப்போது கோவிட்-19 வைரஸ்குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான ரமேஷ் பிதூரி, நேற்று செய்தியாளர்களிடம் வைரஸ் அச்சத்தை எழுப்பினார்.எனினும், இதை அவர் மக்களவையில் ஏனோ எழுப்பவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரமேஷ் பிதூரி கூறும்போது, “6 நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி இத்தாலி சென்று வந்தார். இதனால், அவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உள்ளதா எனபரிசோதனை செய்ய வேண்டும்.இல்லை என்றால் மக்களவையில் அவருக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள் மூலம் மற்ற எம்.பி.க்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இந்த சோதனையின் முடிவை ராகுல் மக்களவையில் தெரிவித்து அனைவரின் அச்சத்தை போக்க வேண்டும்” என்றார்.
இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் நேற்று மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது திமுக எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி பேசும்போது, “சர்வதேச அளவில் கோவிட்-19 வைரஸ் பரவி வருகிறது. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 வைரஸ் பரிசோதனை மையங்களை நிறுவ வேண்டும்.
கோவிட்-19 காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் பெரும்பாலான மருத்துவமனைகள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன. இந்தவைரஸ் எளிதாகப் பரவும் என்பதால், விமான நிலையங்களுக்கு அருகில் சிகிச்சை மையங்கள் இருப்பதும் அவசியம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் பரிசோதனை செய்யவும் வசதிகள் இல்லை. பாதுகாப்பு முகக்கவசங்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.