

தங்களை யாரும் கடத்தவில்லை என்றும் பாஜகவினர் குதிரைபேரத்தில் ஈடுபடவில்லை என்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) மற்றும் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசுக்கு பகுஜன் சமாஜ் (2),சமாஜ்வாதி (1), சுயேச்சை (4) எம்எல்ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், பிஎஸ்பி,எஸ்பி, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 8 எம்எல்ஏ-க்களை பாஜகவினர் ஹரியாணாவில் உள்ள ஒரு ஓட்டலில் ரகசியமாக தங்க வைத்துள்ளதாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. கமல்நாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக காங்கிரஸார் குற்றம்சாட்டினர். ஆனால் பாஜகவினர் இதை மறுத்து வந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ், பிஎஸ்பி, எஸ்பி கட்சிகளைச் சேர்ந்தஎம்எல்ஏ-க்கள் நேற்று முன்தினம் சிறப்பு விமானம் மூலம் போபால் வந்தடைந்தனர். அவர்களுடன் மாநில நிதி அமைச்சர் தருண் பானட்டும் வந்தார்.
இந்நிலையில், எஸ்பி எம்எல்ஏராகேஷ் சுக்லா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நானும் பிஎஸ்பி எம்எல்ஏ குஷ்வாஹாவும் டெல்லி சென்றிருந்தோம். குர்கான் ஓட்டலில் தங்கியிருந்தோம். எங்களை யாரும் கடத்தவில்லை. பாஜகவினர் எங்களிடம் குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. கமல்நாத் அரசுக்கான ஆதரவு தொடர்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரால் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். என்னால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது” என்றார்.
பிஎஸ்பி எம்எல்ஏ குஷ்வாஹாவும் இதே கருத்தை தெரிவித்தார். மேலும் எங்களை பாஜக தலைவர்களிடமிருந்து மீட்டு வந்ததாகக் கூறும் அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஷ்வாஹா தெரிவித்தார். மற்றொரு பிஎஸ்பி எம்எல்ஏ ராம் பாய் கூறும்போது, “எங்களிடம் பாஜகவினர் குதிரைபேரத்தில் ஈடுபட்டதாகக் கூறுவதுவதந்தி. நாங்கள் கடத்தப்படவில்லை” என்றார்.- பிடிஐ