Published : 06 Mar 2020 07:49 AM
Last Updated : 06 Mar 2020 07:49 AM

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

புதுடெல்லி

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளில் உடைமைகளை இழந்தோருக்கு டெல்லி அரசு சார்பில் நிவாரணநிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தர்ணா நடைபெற்றது. இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த் பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா பகுதிகளில் சிஏஏஎதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 23-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது பெரும் கலவரமாக மாறியது. முதல் நாளில் 24 பேர் உயிரிழந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஜிடிபி மருத்துவமனையில் 44 பேர், ஆர்எம்எல் மருத்துவமனையில் 5 பேர், எல்என்ஜேபி மருத்துவமனையில் 3 பேர், ஜக் பர்வேஷ் சந்திரா மருத்துவமனையில் ஒருவர் என இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், ஐ.எஸ்.மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, "கலவரத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாதவர்களின் புகைப்படங்கள், விவரங்களை போலீஸார் இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

டெல்லி அரசு நிவாரண நிதி

டெல்லி கலவரத்தின்போது அதிக பொருட்கள் திருடப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம், பாதியளவு பொருட்கள் திருடப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

கலவரத்தில் சேதமடைந்த வீடுகளுக்காக தலா ரூ.5 லட்சம் வழங்க டெல்லி அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் வீட்டின் உரிமையாளருக்கு ரூ.4 லட்சமும் வாடகைதாரர்களுக்கு ரூ.1 லட்சமும் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

கலவரத்தின்போது சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்க தலா ரூ.10 லட்சம் வரை நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் டெல்லி அரசு உறுதியளித்துள்ளது.

பாஜக நிவாரண உதவி

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியதாவது:

கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பாஜக சார்பில் ரேஷன் அடிப்படையில் உணவுப் பொருட்கள், பணம் வழங்கப்படும். இதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் சுமார் 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

டெல்லி மக்கள் அனைவரும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x