

தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் முடங்கியுள்ளது.
இந்தநிலையில் இன்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
சபாநாயகர் இருக்கையில் ரமாதேவி அமர்ந்து அவையை நடத்தி இருந்தார். இந்நேரத்தில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சில பேப்பர்களை சபாநாயகரை நோக்கி வீசினர். இந்த விவகாரம் தொடர்பாக பின்னர் சபாநாயகரின் கவனத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கொண்டு சென்றனர்.
அவை நடவடிக்கையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி. மாணிக்கம் தாக்கூர் உட்பட, கவுரவ் கோகை, டி.என்.பிரதாபன், தீன்கொரியா கோஷ், உன்னிதன், குர்ஜித்சிங், பென்னி பெஹ்னான் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவாக பிறப்பித்துள்ளார்.