

வெறுப்பும் வன்முறையும் முன்னேற்றத்தின் எதிரிகள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் கடந்த வாரம் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 42 பேர் உயிரிழந்தனர். வாகனங்களும் கடைகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கொண்ட குழுவினர் நேற்று பார்வையிட்டனர். கலவரத்தின்போது எரிக்கப்பட்ட தனியார் பள்ளி ஒன்றையும் அவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘பள்ளி எரிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. பள்ளிகள் இந்தியாவின் எதிர்காலம். வெறுப்பும் வன்முறையும் முன்னேற்றத்தின் எதிரிகள். இந்தியா துண்டாடப்பட்டு, எரிக்கப்படுவதால் பாரத மாதாவுக்கு எந்தப் பலனும் இல்லை’’ என்றார்.
இதேபோல, பெரும்பாலும் எம்.பி.க்களைக் கொண்ட காங்கிரஸின் மற்றொரு குழுவினர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சந்த்பாக் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.