

மத்திய பிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவினர் ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஓராண்டாக முதல்வர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவுக்கு அணி மாறப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 8 பேரை ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பாஜகவினர் ரகசியமாக தங்க வைத்திருப்பதாக நேற்று முன்தினம் இரவு தகவல் வெளியானது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறும்போது, ‘‘எங்கள் கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க நரோத்தம் மிஸ்ரா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முயற்சி செய்கின்றனர். எம்எல்ஏக்களுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை கொடுப்பதாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும் எங்கள் எம்எல்ஏக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவினரால் அழைத்துச் செல்லப்பட்ட சில எம்எல்ஏக்கள் எங்களிடம் திரும்பி வந்துவிட்டனர். எங்களது ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கமல்நாத் 5 ஆண்டுகள் நிச்சயம் முதல்வராக நீடிப்பார்” என்றார்.
இந்நிலையில் பாஜக மேலிடம் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் ரகசியமாக தங்க வைக்க திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் இதே பாணியில் ஏற்கெனவே ஆட்சி கைப்பற்றப்பட்டிருப்பதால், அங்கு செல்வது பாதுகாப்பானதாக இருக்கும் என பாஜக மேலிடம் கருதுகிறது. இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணா மூலம் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையிலான குழுவினர் விமான நிலையம், சொகுசு விடுதிகளில் தேடினர். ஆனால் மத்திய பிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்னும் பெங்களூரு அழைத்துவரப்படவில்லை என தெரியவந்தது. இந்த தகவலை டி.கே.சிவகுமார் தொலைபேசி வாயிலாக காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹரியாணாவில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களை மீட்டு வந்து போபாலில் உள்ள முதல்வரின் இல்லத்தில் தங்க வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது வீட்டுக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாஜக மறுப்பு
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியா கூறும்போது, “மத்திய பிரதேச ஆளும் கட்சி எம்எல்ஏ-க்களை இழுக்க குதிரை பேரம் நடப்பதாக கூறப்படுகிறது. இதில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மாநில அரசியலில் நடைபெறும் சம்பவங்கள் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு மீது ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் அதிருப்தி அடைந்திருப்பதை உணர்த்துவதாக உள்ளது” என்றார்.
கமல்நாத் டெல்லி பயணம்
இதனிடையே முதல்வர் கமல்நாத் டெல்லி விரைந்துள்ளார். நேற்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் கமல்நாத் கூறும்போது, “கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அப்போதிலிருந்தே எங்கள் அரசை கவிழ்க்க பாஜக முயன்று வருகிறது. ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. இந்த முறையும் அவர்களுடைய முயற்சி தோல்வி அடையும்” என்றார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் 230 இடங்கள் உள்ளன. இதில் காங்கிரஸுக்கு 114 உறுப்பினர்கள் உள்ளனர். கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் (2), சமாஜ்வாதி (1) கட்சிகளும் 4 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் ஆதரவு அளித்துள்ளனர். பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர்.
காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்கள் உயிரிழந்ததால் 2 இடங்கள் காலியாக உள்ளன. பெரும் பான்மைக்கு 115 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.