

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இரு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். டெல்லியிலும் சண்டிகரிலும் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு நேற்று உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை இன்று எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். குறிப்பாக தலைநகரான டெல்லியில் கரோனா வைரஸை் பரவல் ஏற்படாமல் தடுக்க தேவையான ஆலோசனைகளை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், டெல்லி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.