

போபால்: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தருவதாக பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார். இதனை ஒட்டி முதல்வர் கமல்நாத்திடம் அவருடைய ஆட்சிக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கமல்நாத் பதிலளிக்கையில், “தங்களுக்கு மிகப் பெரிய தொகையை வாரிவழங்க பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதாக எங்களுடைய எம்எல்ஏக்கள் என்னிடம் புகாரளிக்கிறார்கள். உங்களுக்கு சும்மா கொடுத்தால் பணத்தை தாராளமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்றே நான் அவர்களிடம் சொல்லிவிட்டேன். மார்ச் 26 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் வெல்லும் சூழல் கனிந்திருப்பதால் இத்தகைய சதி வேலையில் பாஜகவினர் இறங்குகிறார்கள். ஆனால், ஆட்சியைக் குறித்த அச்சம் எங்களுக்கு இல்லை. பணப்பட்டுவாடா மூலம் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் பாஜகவினால் அசைக்க முடியாது” என்றார். திக்விஜய் சிங்கின் இந்த குற்றச்சாட்டை பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் மறுத்துள்ளார். - பிடிஐ