

சர்வதேச மகளிர் தினத்தில் எனது சமூக வலைதள கணக்குகளை சாதனை பெண்களுக்காக ஒதுக்க உள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது கருத்துகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடிதனது ட்விட்டர் பக்கத்தில், “பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேறலாம் என நினைக்கிறேன்” என நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. மேலும் பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக #NoSir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இந்நிலையில், “இந்த மகளிர்தினத்தன்று (மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை), தனது வாழ்க்கை மற்றும் பணியின் மூலம் நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெண்களுக்காக எனது சமூக வலைதளகணக்குகளை ஒதுக்க உள்ளேன். இது லட்சக்கணக்கான பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். நீங்கள் அதுபோன்ற பெண்ணா அல்லது முன் உதாரணமாக விளங்கும் பெண்களை உங்களுக்கு தெரியுமா? அதுபோன்ற சாதனைப் பெண்களின் கதையை பகிர்ந்துகொள்ளுங்கள்” என மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அதனுடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நரேந்திர மோடியின் சமூக வலைதளங்களை ஒரு நாள் நிர்வகிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. சாதனை பெண்களைப் பற்றிய கதையை, ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடலாம். வீடியோவாக பதிவு செய்து யூட்யூபிலும் #SheInspiresUs என்றஹேஷ்டேக்கில் பதிவேற்றம் செய்யலாம். இதிலிருந்து தேர்வுசெய்யப்படும் பதிவுக்கு சொந்தக்காரர்கள் மோடியின் சமூக வலைதள கணக்குகளை ஒரு நாள் நிர்வகிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.