

கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து சமூகவலைத்தளங்களில் நேரத்தை விரயம் செய்யாமல் விரைந்து செயல்படுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி சமூகவலைத்தளங்களிலிருந்து வெளியேறப் போவதாக தெரிவித்ததையடுத்து ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், கரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கான திட்டங்கள் பற்றி பிரதமர் யோசிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் நேரம் விரயம் செய்ய வேண்டாம். இந்தியா அவசரநிலையை எதிர்கொள்ளும் போது, கரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு இந்தியரின் மீதும் கவனத்தை செலுத்துங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் கரோனா பாதிப்பு பற்றி சிங்கப்பூர் பிரதமர் எடுத்துவரும் திட்டம் தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
முன்னதாக கரோனா பற்றி ராகுல் காந்தி ட்வீட் செய்யும் போது, ‘அரசு கரோனா அச்சுறுத்தலை சீரியசாக அணுகவில்லை என்பதே. உரிய நேரத்தில் நடவடிக்கை மிக முக்கியமானது, அவசரமானது’ என்று பதிவிட்டிருந்தார்.