

டெல்லி வடகிழக்குப்பகுதியில் நடந்த கலவரத்தின் போது போலீஸாரை துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டிய இளைஞரை உ.பி.யில் உள்ள பரேலியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த இளைஞர் பெயர் ஷாருக் என்றும், துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டிய காட்சி நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்தபின் டெல்லியில் இருந்து அந்த இளைஞர் மறைந்துவிட்டார். அதன்பின் இருதனிப்படை அமைத்து விசாரணை நடத்தி போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் வடகிழக்குப்பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்தவாரத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வகுப்புக் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் மஜ்பூர் பகுதியில் டெல்லியில் குடியுரிமை சட்டத்தின் (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த கலவரத்தை அடக்கச் சென்ற காவலர் தீபக் தாஹியாவை நோக்கி துப்பாக்கியைக் காட்டி இளைஞர் ஒருவர் மிரட்டிய வீடியோ வைரலானது.
இந்த இளைஞர் பெயர் ஷாருக் என்பதும், டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆனால், போலீஸார் அவரைத் தேடியபோது அவர் டெல்லியில் இல்லை.
இதையடுத்து டெல்லி போலீஸ் குற்றவியல் பிரிவு ஏ.கே.சிங்கலா தலைமையில் ஒரு குழுவும், சிறப்புப் புலனாய்வு பிரிவு என இரு குழு அமைக்கப்பட்டு அந்த இளைஞரைத் தேடி வந்தனர். அந்த இளைஞர் உத்தரப்பிரதேசம், பரேலி நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு சென்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
ஷாருக்கால் துப்பாக்கியால் மிரட்டப்பட்ட போலீஸ் தலைமைக் காவலர் தீபக் தாஹியா கூறுகையில் “ கலவரம் நடந்த அன்று எனக்கு மவுஜ்புர் சவுக் பகுதியில் பாதுகாப்புப் பணி இருந்தேன். கலவரம் அதிகமான நிலையில் நான் கையில் லத்தியுடன் கலவரக்காரர்களைத் தடியடி நடத்தி விரட்ட முயன்றேன். அப்போது திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியை என்னை நோக்கிக் காட்டியபடி மிரட்டினார். எனது கையில் லத்தி மட்டுமே இருந்ததது. வேறு ஆயுதங்கள் இல்லை. அப்போது அவரது கவனத்தைத் திசை திருப்ப நான் மறுபக்கம் குதித்தேன்.
வேறு யாரும் என் வழியில் குறுக்கிடாதபடி அந்த இளைஞரை என் வசமே வைத்திருந்தேன்.
கலவரத்தில் வேறு யாரும் அங்கு இறக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவரை நோக்கி தைரியமாக நடந்தேன். துப்பாக்கியைக் கீழே போடச் சொல்லி எச்சரிக்கை செய்து கொண்டே சென்றேன். மக்களுக்குப் பாதுகாப்பைத் தருவது எனது பணி. அதைச் செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பின்னர் அந்த நபர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதற்குள் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந்த இளைஞர் தப்பிவிட்டார்" எனத் தெரிவித்தார்