

அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி அடையும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி வடகிழக்குப் பகுதி கலவரத்தில் 46 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து எழுந்த அதிருப்தியான சூழலில் பிரதமர் மோடி இந்தக் கருத்தை பாஜக எம்பி.க்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியின் வடகிழக்குப்பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வகுப்புக் கலவரமாக மாறியது. இதில் 46 பேர் பலியானார்கள், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவரத்தை தூண்டியதாக பாஜக தலைவர்கள் கபில்மிஸ்ரா, அனுராக்தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சூழலில் பாஜக எம்.பி.க்களின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்ட பல்வேறு மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இதில் பிரதமர் மோடி எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசியது குறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், " அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். நாட்டின் மேம்பாட்டுக்கு இந்த மூன்று அம்சங்களும் தேவையானவை.
வளர்ச்சி என்பது பாஜகவின் மந்திரமாக இருந்து வருகிறது. ஆதலால், இந்த 3 அம்சங்களையும் அனைத்து எம்.பிக்களும் மதித்து, கடைப்பிடித்து வந்தால் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். இதை பேச்சளவில் நிறுத்தாமல் செயலில் காட்ட வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
ஆனால் சில அரசியல் கட்சிகள் இதில் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு, கட்சிக்காக செயலாற்றுகிறார்கள். அவர்களுக்குக் கட்சியின் நலன்தான் முக்கியம். ஆனால், நாம் நாட்டுக்காக வாழ்கிறோம், நாட்டு நலனே முக்கியம் என அறிவுரை வழங்கினார்.
பாரத் மாதா கி ஜே எனும் வார்த்தை தவறாக கட்டமைப்படுகிறது சர்ச்சையை ஏற்படுத்துகிறது என்று ஒருவர் பேசினார் (மன்மோகன்சிங்), சுதந்திரப் போராட்ட காலத்தில் வந்தே மாதரம் எனும் வார்த்தைகூட சர்ச்சையாகப் பார்க்கப்பட்டது.
அனைவருக்குமான அரசு , அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கு நம்பிக்கை என்ற அடிப்படையில் கட்சித் தலைவர்கள் நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்து, செயல்பட வேண்டும். நாட்டு நலனே நமக்குப் பிரதானமாகும்." எனப் பிரதமர் மோடி பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.