மோடியின் பக்தர்கள் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறினால் நாடு அமைதியாக மாறிவிடும்: என்சிபி தலைவர் விமர்சனம்

என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் : கோப்புப்படம்
என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் : கோப்புப்படம்
Updated on
2 min read

மோடியின் பக்தர்கள் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறினால் நாடு அமைதியாக மாறிவிடும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும், மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான நவாப் மாலிக் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி, சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுவது குறித்துச் சிந்தித்து வருவதாகத் தெரிவித்ததையடுத்து, இந்த கருத்தை என்சிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் உலக அளவில் அதிகமான அளவு ஆதரவாளர்களைக்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 53.3 மில்லியன் மக்களும், முகநூலில் 44 மில்லயனும், இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியனும், யூடியூப்பில் 4.5 மில்லியனும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி தான் பதவி ஏற்ற நாளில் இருந்து சமூக ஊடகங்களில் மிகவும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறார். இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுடன் சமூக ஊடகங்கள் வழியாகப் பிரதமர் மோடி நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால், சில நேரங்களில் நாட்டில் நடக்கும் முக்கியச் சம்பவங்கள், நிகழ்வுகள், குறிப்பாக டெல்லி கலவரம், கும்பல் தாக்குதல் போன்றவற்றில் கருத்துகள் ஏதும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருப்பது சமூக ஊடகங்களில் பெரிதாக விமர்சிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "இந்த ஞாயிறன்று, அனைத்து சமூக ஊடகங்களான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருகிறேன். இது குறித்து விரைவில் உங்களிடம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

நவாப் மாலிக், பிரதமர் மோடி : கோப்புப்படம்
நவாப் மாலிக், பிரதமர் மோடி : கோப்புப்படம்

இதற்குப் பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, " வெறுப்புணர்வைக் கைவிடுங்கள், சமூக ஊடகங்களை அல்ல" எனப் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளருமான நவாப் மாலிக் ட்விட்டரில் பிரதமர் மோடியின் அறிவிப்பைக் கிண்டல் செய்துள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற இருப்பதாகப் பிரதமர் மோடி நேற்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியைத் தொடர்ந்து சில தலைவர்களும் சமூக ஊடகங்களில் வெளியேறப் போவதாகத் தெரிவித்துள்ளார்கள். மோடியின் பக்தர்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிவிட்டாலே நாடு அமைதியாக மாறிவிடும்.

பிரதமர் மோடியின் முடிவு நாட்டின் நலனுக்கானது. மோடியின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம் "எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் #ModiQuitsSocialMedia எனும் ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தான் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறப்போவதாக அறிவிப்பு செய்தவுடன், லட்சக்கணக்கான நெட்டிசன்கள் அவ்வாறு ஏதும் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, ட்விட்டரில் அதிகமான ஆதரவாளர்கள் இருக்கும் உலகத் தலைவர்களில் முதலிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2-வது இடத்தில் முன்னாள் அதிபர் பாரக் ஒபமா, 3-வது இடத்தில் பிரதமர் மோடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in