உ.பி. முதல்வர் நிகழ்ச்சியில் குழந்தையை தோளில் சுமந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர்: வைரலாகும் புகைப்படம்

கைக்குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டஉ.பி. பெண் காவலர் : படம் ஏஎன்ஐ
கைக்குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டஉ.பி. பெண் காவலர் : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் 18 மாத கைக்குழந்தையைத் தனது தோளில் சுமந்தபடி பெண் காவலர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே சமமான முக்கியத்துவத்தை அளித்து பணியாற்றிவரும் பெண்களின் பணி எளிதானது அல்ல என்பதை இந்த பெண் காவலர் நிரூபித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கவுதம் புத்த நகருக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.1,452 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

யோகி ஆதித்யநாத்தின் வருகையை முன்னிட்டு விவிஐபி பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர் ப்ரீத்தி ராணியும் நேற்று காலை 6 மணி முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.

காவலர் ப்ரீத்தி ராணி
காவலர் ப்ரீத்தி ராணி

ஆனால், ப்ரீத்தி ராணி மட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை, அவர் தனது தோளில் 18 மாதக்குழந்தையையும் சுமந்தபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். நண்பகலில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்தியாநாத் புறப்படும்வரை தனது தோளில் கைக்குழந்தையைச் சுமந்தபடி ப்ரீத்தி ராணி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்

இது குறித்து பெண் போலீஸ் ப்ரீத்தி ராணி கூறுகையில், " எனது கணவருக்குத் தேர்வு இருந்ததால், குழந்தையைக் கவனித்துக்கொள்ள அவரால் முடியவில்லை. எனக்கு வேறு வழிதெரியாததால், என் குழந்தையை நானே கவனித்துக்கொண்டேன். வேலையும் முக்கியம் என்பதால், என் குழந்தையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டேன்" எனத் தெரிவித்தார்.

பெண் காவலர் ப்ரீத்தி ராணி தனது கைக்குழந்தையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in