

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவையில் தவறான நடத்தையில் பாஜக பெண் எம்.பி.க்களிடம் ஈடுபட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. மக்களவையில் காலை அலுவல்கள் தொடங்கியவுடன் டெல்லி வகுப்புவாத கலவரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேச முயன்றனர்.
அப்போது அதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால், அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் அவைகூடியபோது காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் டெல்லி கலவரம் குறித்து மீண்டும் பேசவும், உள்துறை அமி்த் ஷா ராஜினாமா செய்யக்கோரியும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அந்தநேரத்தில் காங்கிரஸ், பாஜக எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த மக்களவைத் தலைவர் அவையை இன்று நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் தன்னை பாஜக எம்.பி. ஜஸ்கவுர் மீனா தாக்கியதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, பாஜக எம்.பி.க்களிடம் தவறான நடத்தையை அவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள்ஈடுபட்டார்கள் எனக் கூறி மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " அவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், பாஜக பெண் எம்.பி.க்களிடம் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
கடந்த 3 கூட்டத்தொடர்களாகக் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் சக்தி, அவையை நடத்தவிடாமல் இடையூறு செய்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டினார்