டெல்லி கலவரத்தில் பலி 46 ஆக அதிகரிப்பு: 335 எஃப்ஐஆர் பதிவு; 40 கொலை வழக்கு - இதுவரை 1,000 பேர் கைது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 335 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 40 கொலை வழக்குகளாகும்.

குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த வாரம் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வகுப்புக் கலவரமாகி, பொதுச் சொத்துகள், தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, தீ வைக்கப்பட்டன. அதேபோல வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவப் படையினர் களத்தில் இறங்கியதையடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது. இந்தக் கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று வரை 45 பேர் உயிரிழந்திருந்த நிலையில் கூடுதலாக இன்று ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழப்பு 46 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக இரு சிறப்பு விசாரணைக் குழுக்களை போலீஸார் அமைத்துள்ளனர். போலீஸ் கூடுதல் ஆணையர் தலைமையில், இரு துணை ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள் ஆகியோர் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக நடந்து வரும் விசாரணை தொடர்பாக டெல்லி போலீஸ் ஆணையர் ஸ்ரீவஸ்தவா எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 335 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 40 கொலை வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன என போலீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லியில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று பார்வையிட்டார். கலவரத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஷிவ விஹார், காராவால் நகர், ஜாப்ராபாத், மஜ்பூர், பாபர்பூர், சாந்த் பாக், ஷிவ் விஹார், பைஜான்பூரா, யமுனா விஹார், முஷ்தபாபாத் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in